Friday, January 28, 2011

தீண்ட மாட்டேன் !

பொன்னுருக்கி வடித்தாற் போன்றே
பூரிக்கும் அழகை ஏற்றாய்
நின்னுடலை நீயே விற்று
நிறையிழந்து வாழும்,பாவச்
சின்னமான உன்னைத் தொட்டால்
சீர்கெடுமென் உடல்தான் நோயால்
உன்னைத்தான் தீண்ட மாட்டேன்
ஒருபோதும் சிறுமை செய்யேன்.

மதியினையே மயக்கிப் போதை
மகிழ்வினைத்தான் ஊட்டிப் பின்னர்
எதைவிற்றுங் குடிக்கத் தூண்டி
இல்வாழ்வைக் குலையச் செய்து
சிதைத்திடுமே மனைவி மக்கள்
சீரான உறவை எல்லாம்
மதுவினைத்தான் தீண்ட மாட்டேன்
மனதாலும் நினைக்க மாட்டேன்.

புகையைத்தான் வெளியே தள்ளி
புகுத்திடுமே நச்சை உள்ளே
பகையாகி உடம்புக் கேதான்
பல்வேறு கேட்டைத் தந்து
நகைப்பிற்கே உரிய னாக்கி
நாசமாக்கும் இனிய வாழ்வை
புகைப்பழக்கம் தீண்ட மாட்டேன்
பொன்னுடலை எரிக்க மாட்டேன்.

1 comment:

  1. மாண்டு போகும் வரை... தீண்ட மாட்டேன் என்பதாய் வாழ்க்கையில் தீயவற்றை ஒதுக்க தீண்டாமையாய், தீண்ட மாட்டேன் என்னும் கவிதை வரிகளில் அற்புதமாக... வாழ்த்துகள்...

    ReplyDelete