Thursday, March 7, 2013


பெண்ணின் பெருமை 

பெண்ணென்ற சொற்றன்னைக் கேட்ட போழ்தே 
பெண்னையோர் நிற்றின்பப் பொருளாய்க் கொண்டு 
எண்ணித்தான் பெண்ணினத்தை இயன்ற மட்டும் 
இழிவாக ஏசுகின்ற இற்றை நாளில் 
பெண்ணினத்தின் பெருமையை உணர்ந்து கொண்டு 
பெருந்தவற்றை உடன்விடுத்து இப்போ திங்கு 
மண்ணகத்தில் பெண்ணினத்தின் பெருமை போற்றல் 
மதியுடையோர் செயலாகு மன்றோ சொல்வீர்.

நல்வழியைப் புகன்றிட்ட ஔவைப் பாட்டி 
நன்னெறியில் கற்புடைய சிலம்புச் செல்வி 
இல்வாழ்வைத் துறந்துலகில் அறத்தைக் காத்த
எழிலரசி மேகலையும் ; மற்றும் நன்றாய் 
பல்சுவையில் இன்னமுதாம் பாடல் யாத்த 
பாவரசி சரோசினியார் ; இந்த மண்ணில் 
நல்லாட்சி புரிந்த  இந்தி  ராவும்;
நங்கையர் குலத்திற்கே பெருமை யன்றோ ? 

சிங்கார நடைபயின்று மழலை ஈந்து 
சிரிக்கவைக்கும் சின்னஇளங் குழந்தை யாவாய்
தங்கணவன் இன்பதுன்ப வாழ்வில் எல்லாம் 
தன்னேரில் துணையாக ஆவாய் நன்று.
பொங்குகின்ற தன்னழகால் கணவர்க் கின்ப 
பொற்றமிழ்போல் இன்பமூட்டும் மனைவி யாவாய் 
தங்கம்போல் பாதுகாத்து அன்பை யூட்டும்
தாயாவாய் அனைத்துமாவாய் பெண்ணே வாழி.....!

வையகத்தில் வாழ்கின்ற மக்கள் தம்மை 
வளர்த்திட்டாய் அன்புடனே தாயாய்த் தோன்றி 
உய்கின்ற நெறிசொன்னாய்; ஒழுக்கம் சொன்னாய் .
உயிரிடத்துப் பற்றுவேண்டும் என்றே கூறி
கையெடுத்து வணங்குகின்ற தெய்வ மாகி 
கருனையோ டன்பிரக்கம் அருளு மீந்து 
பொய்யனாக வாழாதே என்றே கூறிப் 
புகட்டினாய் அறிவைத்தான் பெண்ணே வாழி.

தாய்மார்கள் தம்மக்கள் தம்மை நன்கு 
தகுதியோடு வளர்த்திடவே தவறி விட்டால் 
தாய்நாட்டில் நல்லோரை வல்லோர் தம்மை 
தகைசான்ற அறிஞரினைக் காண்ப தேது
மாய்ந்திட்டான் தன்செல்வன் களத்தி லென்று 
மற்றோரால் அறிந்திட்ட வீரத் தாயும் 
பாய்ந்திட்டாள் களம்நோக்கி  மார்புப் புண்ணை
பார்த்தவளும் மகிழ்ந்திட்டாள் ,அறிந்த தொன்றே !


பெற்றெடுத்த தாய்நாட்டை உயிரின் மேலாய் 
பேணுகின்ற மொழிதன்னை எந்த நாளும் 
வற்றாத பெருங்கடலை உலகை யெல்லாம்
வருந்தாமல் தாங்குகின்ற மண்ணை விண்ணில் 
சுற்றுகின்ற நிலவுதன்னை ,மலையைக் ,காற்றை, 
சுழன்றோடும் பேராற்றை உலகந தன்னில் 
மற்றுமுள்ள இயற்கையை எலலாம் பெண்ணாய் 
மதியுடையோர் போற்றிடுவர் உண்மை யன்றோ ?

வாழைத்தீங் கனியழுகின் குப்பை சேரும்
வஞ்சியர்கள் தவறிவிட்டால் உலகம் தூற்றும் 
தாழையில் மனமின்றேல் தலையில் சூடார் 
தரங்கெட்ட பெண்களினை யாரும் போற்றார் 
கோழையால் நாட்டிற்கு என்ன நன்மை 
குறைபட்ட பெண்ணாலே பெருமை யேது
பாழ்பட்ட உணவுதான் நமக்கு வேண்டாம்
பண்புகெட்ட பெண்கள்நம் நாட்டில் வேண்டாம்.

அருங்கலைகள் அனைத்தையும் கற்றல் வேண்டும்
ஆண்களோடு போட்டியிட்டு வளர்தல் வேண்டும்
பெரும்பணிகள் யாவிலும் பெண்கள் வீற்று 
பூவையர் குலம்நன்கு தழைக்க வேண்டும்
அருள்நிறைந்த நெஞ்சினராய் வாழ்தல் வேண்டும்
அன்புநெறி வையகத்தில் நிலைத்தல் வேண்டும்
வருநாளில் நமதுநாடு செழித்து வாழ 
வன்மையுள் நல்லோரை ஈதல் வேண்டும்.
Thursday, January 19, 2012

திருநாள்


நெற்றியிலே வேர்வையாய்த் துளிர்த்த நீரை
நிலத்தினிலே சிந்தவிட்டு ,மனத்தில் உள்ள
பற்றெல்லாம் நிலமகளின் மீது வைத்து
பயிர்முகத்தை நாள்தோறும் பார்த்து நின்று
முற்றியநல் நெற்கதிர்கள் கண்ட மாட்டு
முகம்மலரும் நல்லுழவன் வாணாள் தன்னில்
முற்றத்தில் சோறுபொங்கி மகிழ்வு கொள்ளும்
முத்தமிழர் பொங்கல்நாள் திருநா ளாகும்.

செந்தமிழைக் காத்திடவே வாழ்வை ஈந்த
செல்வனிரா சேந்திரன்தன் உயிர்மீ தாணை
'இந்தியேநீ ஒழிக'வென்றே முழங்கிக் கொண்டு
எரியூட்டு தம்முயிரை மாய்த்துக் கொண்ட
செந்தமிழன் அரங்கநாதன்,சின்னச் சாமி
சிவலிங்கம் மீதாணை; இந்த நாட்டில்
இந்தியேதா நொழிந்துபட்டு உயிரின் மேலாம்
இனியதமிழ் ஆளும்நாள் திருநா ளாகும்

அரும்பாக நேற்றுவரை சிரித்து நின்று
அழகான மலராக மலர்ந்தே இன்று
வருங்காலத் துணைவனையே எண்ணி எண்ணி
வண்டன்ன கண்களிலே மயக்கங் கொண்டு
இரவெல்லா மினியநறுங் கனவு கண்டு
ஏங்கியேங்கி நிற்கின்ற நங்கை வாழ்வில்
பொருந்தியநல் ஆடவனை மாலை சூடும்
பொன்னான மணநாளே திருநா ளாகும்.   

பகைவென்று வெற்றிகொள்ளும் வீர நாளே
படைமறவன் வாழ்வினிலே திருநா ளாகும்;
மகன்சான்றோ னெனக்கேட்கு மின்ப நாளே
மகிழ்கின்ற தாய்க்கேநற் றிருநா ளாகும்;
அகமகிழ ஏழைகட்குக் கொடுக்கும் நாட்கள்
அனைத்துமே வள்ளலுக்குத் திருநா ளாகும்;
தகுதிபெற்றோர் அமைச்சராக அமரும் நாளே
தரமிக்க அரசுக்குத் திருநா ளாகும்.

சாதிமுறை ஒளிந்துபட்டு மக்க ளெல்லாம்
சமமாகும் நன்னாளே திருநா ளாகும்.
நீதிமுறை நாட்டினிலே நிலைத்து நிற்கும்
நேரியநல் பொன்னாலே திருநா ளாகும்.
ஓதிச்சென்ற வள்ளுவனின் வழியில் நின்று
உலகத்து மக்களெலா மொழுகு கின்ற
தீதற்ற நன்னாளே ; இன்ப நாளே
திருநாளாய் உலகுக்கு ஆகு மன்றோ?

போர்தொடுத்துப் பாராள வேண்டு மென்ற
பொல்லாத ஆசைதான் ஒழிந்து பட்டு
பாரினிலே நல்லமைதி நிலவும் நாளே
பேரறிஞர் போற்றும்நற் றிருநா ளாகும்.
பார்போற்ற வாழ்ந் திட்ட உயர்ந்த மேதை
பனிமலரைச் சூடியநல் பண்புச் செல்வன்
நேருவழி மக்களெலாம் செல்லும் நாளே
நேரற்ற திருநாளாய் ஆகு மன்றோ ?

கட்டாகப் புத்தகத்தை கையி லேந்தி
காலையில் பள்ளிசென்று ; மாலை வந்து
கொட்டாவி விட்டவண்ணம் இரவு வேளை
குறிப்பிட்ட பாடங்களைத் தேர்வுக் கென்று
திட்டமிட்டு படிக்கின்ற மாண வர்க்கு
தேர்வெண்ணை நாளிதழில் காணும் நாளே
மட்டில்லா மகிழ்வினையே அளிக்க வல்ல
மாப்பெரிய திருநாளாய் ஆகு மன்றோ

காலையில் எழுந்தவுடன் அரிசி வேண்டி
காலயர நாள்முழுதும் நின்று விட்டு
மாலையில் அரிசியில்லை என்று சொல்ல
மனம்நொந்து இல்லடைந்தே இரவு வேளை
ஓலமிட்டு அழுகின்ற மக்க ளெல்லாம்  
உணவுண்டு குறைவின்றி உள்ளம் பொங்கும்
காலநறும் நன்னாளே இந்த நாட்டைச்
சார்ந்தமக்கள் அனைவருக்குந் திருநா ளாகும்.

Friday, January 28, 2011

தீண்ட மாட்டேன் !

பொன்னுருக்கி வடித்தாற் போன்றே
பூரிக்கும் அழகை ஏற்றாய்
நின்னுடலை நீயே விற்று
நிறையிழந்து வாழும்,பாவச்
சின்னமான உன்னைத் தொட்டால்
சீர்கெடுமென் உடல்தான் நோயால்
உன்னைத்தான் தீண்ட மாட்டேன்
ஒருபோதும் சிறுமை செய்யேன்.

மதியினையே மயக்கிப் போதை
மகிழ்வினைத்தான் ஊட்டிப் பின்னர்
எதைவிற்றுங் குடிக்கத் தூண்டி
இல்வாழ்வைக் குலையச் செய்து
சிதைத்திடுமே மனைவி மக்கள்
சீரான உறவை எல்லாம்
மதுவினைத்தான் தீண்ட மாட்டேன்
மனதாலும் நினைக்க மாட்டேன்.

புகையைத்தான் வெளியே தள்ளி
புகுத்திடுமே நச்சை உள்ளே
பகையாகி உடம்புக் கேதான்
பல்வேறு கேட்டைத் தந்து
நகைப்பிற்கே உரிய னாக்கி
நாசமாக்கும் இனிய வாழ்வை
புகைப்பழக்கம் தீண்ட மாட்டேன்
பொன்னுடலை எரிக்க மாட்டேன்.

Tuesday, December 14, 2010

தேர்தல்

தேர்தல்தான் வந்ததம்மா தமிழர் நாட்டில்
தெருவெல்லாம் முழக்கந்தான் விழாவின் கோலம்
யாராண்டால் என்னவென்ற நிலையை மாற்றி
எல்லோரும் தவறாமல் வாக்குச் செய்வோம்
நீர்ப்பங்கில் தொழில்வளத்தில் உரிமை காத்து
நீண்டகால வேலைக்கு வாய்ப்புக் கண்டு
சீரான வளர்ச்சிதனை நகர்போல் சிற்றூர்
சேரிகளும் பெற்றிடத்தான் ஆட்சி காண்போம் .

கள்ளவாக்கு கறுப்புவாக்கைத் தடுத்தல் வேண்டும்
கணக்காக நல்லவாக்கு விழுதல் வேண்டும்
உள்ளத்தில் தூய்மையும் ஓயாத் தொண்டும்
ஊழலற்ற ஆட்சிக்கு துணையாய் நின்று
எள்ளளவும் நேர்மைக்குப் பங்க மின்றி
எளிமையாய் என்றென்றும் வாழ்ந்து காட்டி
தள்ளாடா உறுதியோடு கொள்கை காக்கும்
தரமான நல்லவரைத் தேர்வு செய்வோம்.

பணத்துக்கு வாக்களிக்கும் பழக்கம் வேண்டாம்
பாசாங்காய் நடித்தேதான் வென்ற பின்னர்
பணத்துக்கு அலைவோரைப் படுக்க வைப்போம்
பாமரரும் நிமிர்ந்துவாழ தொண்டு செய்யும்
குணத்துக்கு உரியவரைத் தேடிக் காண்போம்
கொடுத்திட்ட உறுதிமொழி காத்து ,நன்றி
உணர்வுடைய பண்பினரை;ஐந்து ஆண்டும்
ஓடியாடி உழைப்பவரை ஆளச்செய்வோம்.

Saturday, November 27, 2010

ஓய்வு

துடிக்கின்ற நாடிக்குச் சாவில் ஓய்வு
          துள்ளுகின்ற இளமைக்கு முதுமை ஓய்வு
சுடுகின்ற கதிருக்கு இரவில் ஓய்வு
          சுடர்கின்ற நிலவுக்குப் பகலில் ஓய்வு
தொடுகின்ற செயலுக்கு வெற்றி ஓய்வு
          துன்பமுறும் மனதுக்கு இன்பம் ஓய்வு
கொடுக்கின்ற கரங்களுக்கு இன்மை ஓய்வு
           குதித்தாடும் உடலுக்கு உறக்கம் ஓய்வு


எழுந்துவரும் கடலலைக்குக் கரையில் ஓய்வு
           இருண்டுவரும் மேகத்திற்கு மழையில் ஓய்வு
எழுதுகின்ற தேர்வுக்குத் தேர்ச்சி ஓய்வு
           இருவர்தம் காதலுக்கு மணத்தால் ஓய்வு
பழுதுற்ற நெஞ்சுக்கு அமைதி ஓய்வு
           பசிக்கின்ற வயிற்றுக்கு உணவால் ஓய்வு
உழவனுக்கு அறுவடையின் மகிழ்ச்சி ஓய்வு
           உருவான கருவுக்குப் பேற்றில் ஓய்வு


திரைக்காட்சி காண்போருக்கு இடையில் ஓய்வு
           தெருப்பிச்சை எடுப்போர்க்கு ஏது ஓய்வு ?
அரசுவேலை ஓய்வதுதான் ஐம்பெத்தெட்டில்
            அறுபதில்தான் ஆசைக்கு ஓய்வு என்பர்
எரிகின்ற நெருப்புக்கு நீரால் ஓய்வு
             இளமையில் ஓய்வின்றி உழைத்தல்  நன்று
வரவுதனில் ஓய்வின்றி உழைத்துச்சேர்த்தால்
             வறுமைதான் ஓய்வுபெறும் சிறக்கும் வாழ்வு ! 

Saturday, November 20, 2010

வெண்ணிலவு

வெண்ணிலவே! தண்நிலவே! வானம் தன்னில்
விடியவிடிய உலாவந்து முகத்தைக் காட்டு;
கண்ணான எம்வீட்டு மழலைப்  பூக்கள்
களிப்புடனே சோறுண்ண முகத்தைக் காட்டு;
பெண்ணவளின் முகவனத்தில் மெருகை யூட்ட
பிரித்தளித்து உன்பொலிவில் மங்கி னாயோ?
விண்ணில்உன் பிறை,நிறையாம் சிரிப்பைக் கண்டு
பித்தனான கவிஞன்தன் கவிதைப் பூவே!