Showing posts with label திருநாள். Show all posts
Showing posts with label திருநாள். Show all posts

Thursday, January 19, 2012

திருநாள்


நெற்றியிலே வேர்வையாய்த் துளிர்த்த நீரை
நிலத்தினிலே சிந்தவிட்டு ,மனத்தில் உள்ள
பற்றெல்லாம் நிலமகளின் மீது வைத்து
பயிர்முகத்தை நாள்தோறும் பார்த்து நின்று
முற்றியநல் நெற்கதிர்கள் கண்ட மாட்டு
முகம்மலரும் நல்லுழவன் வாணாள் தன்னில்
முற்றத்தில் சோறுபொங்கி மகிழ்வு கொள்ளும்
முத்தமிழர் பொங்கல்நாள் திருநா ளாகும்.

செந்தமிழைக் காத்திடவே வாழ்வை ஈந்த
செல்வனிரா சேந்திரன்தன் உயிர்மீ தாணை
'இந்தியேநீ ஒழிக'வென்றே முழங்கிக் கொண்டு
எரியூட்டு தம்முயிரை மாய்த்துக் கொண்ட
செந்தமிழன் அரங்கநாதன்,சின்னச் சாமி
சிவலிங்கம் மீதாணை; இந்த நாட்டில்
இந்தியேதா நொழிந்துபட்டு உயிரின் மேலாம்
இனியதமிழ் ஆளும்நாள் திருநா ளாகும்

அரும்பாக நேற்றுவரை சிரித்து நின்று
அழகான மலராக மலர்ந்தே இன்று
வருங்காலத் துணைவனையே எண்ணி எண்ணி
வண்டன்ன கண்களிலே மயக்கங் கொண்டு
இரவெல்லா மினியநறுங் கனவு கண்டு
ஏங்கியேங்கி நிற்கின்ற நங்கை வாழ்வில்
பொருந்தியநல் ஆடவனை மாலை சூடும்
பொன்னான மணநாளே திருநா ளாகும்.   

பகைவென்று வெற்றிகொள்ளும் வீர நாளே
படைமறவன் வாழ்வினிலே திருநா ளாகும்;
மகன்சான்றோ னெனக்கேட்கு மின்ப நாளே
மகிழ்கின்ற தாய்க்கேநற் றிருநா ளாகும்;
அகமகிழ ஏழைகட்குக் கொடுக்கும் நாட்கள்
அனைத்துமே வள்ளலுக்குத் திருநா ளாகும்;
தகுதிபெற்றோர் அமைச்சராக அமரும் நாளே
தரமிக்க அரசுக்குத் திருநா ளாகும்.

சாதிமுறை ஒளிந்துபட்டு மக்க ளெல்லாம்
சமமாகும் நன்னாளே திருநா ளாகும்.
நீதிமுறை நாட்டினிலே நிலைத்து நிற்கும்
நேரியநல் பொன்னாலே திருநா ளாகும்.
ஓதிச்சென்ற வள்ளுவனின் வழியில் நின்று
உலகத்து மக்களெலா மொழுகு கின்ற
தீதற்ற நன்னாளே ; இன்ப நாளே
திருநாளாய் உலகுக்கு ஆகு மன்றோ?

போர்தொடுத்துப் பாராள வேண்டு மென்ற
பொல்லாத ஆசைதான் ஒழிந்து பட்டு
பாரினிலே நல்லமைதி நிலவும் நாளே
பேரறிஞர் போற்றும்நற் றிருநா ளாகும்.
பார்போற்ற வாழ்ந் திட்ட உயர்ந்த மேதை
பனிமலரைச் சூடியநல் பண்புச் செல்வன்
நேருவழி மக்களெலாம் செல்லும் நாளே
நேரற்ற திருநாளாய் ஆகு மன்றோ ?

கட்டாகப் புத்தகத்தை கையி லேந்தி
காலையில் பள்ளிசென்று ; மாலை வந்து
கொட்டாவி விட்டவண்ணம் இரவு வேளை
குறிப்பிட்ட பாடங்களைத் தேர்வுக் கென்று
திட்டமிட்டு படிக்கின்ற மாண வர்க்கு
தேர்வெண்ணை நாளிதழில் காணும் நாளே
மட்டில்லா மகிழ்வினையே அளிக்க வல்ல
மாப்பெரிய திருநாளாய் ஆகு மன்றோ

காலையில் எழுந்தவுடன் அரிசி வேண்டி
காலயர நாள்முழுதும் நின்று விட்டு
மாலையில் அரிசியில்லை என்று சொல்ல
மனம்நொந்து இல்லடைந்தே இரவு வேளை
ஓலமிட்டு அழுகின்ற மக்க ளெல்லாம்  
உணவுண்டு குறைவின்றி உள்ளம் பொங்கும்
காலநறும் நன்னாளே இந்த நாட்டைச்
சார்ந்தமக்கள் அனைவருக்குந் திருநா ளாகும்.