Tuesday, December 14, 2010

தேர்தல்

தேர்தல்தான் வந்ததம்மா தமிழர் நாட்டில்
தெருவெல்லாம் முழக்கந்தான் விழாவின் கோலம்
யாராண்டால் என்னவென்ற நிலையை மாற்றி
எல்லோரும் தவறாமல் வாக்குச் செய்வோம்
நீர்ப்பங்கில் தொழில்வளத்தில் உரிமை காத்து
நீண்டகால வேலைக்கு வாய்ப்புக் கண்டு
சீரான வளர்ச்சிதனை நகர்போல் சிற்றூர்
சேரிகளும் பெற்றிடத்தான் ஆட்சி காண்போம் .

கள்ளவாக்கு கறுப்புவாக்கைத் தடுத்தல் வேண்டும்
கணக்காக நல்லவாக்கு விழுதல் வேண்டும்
உள்ளத்தில் தூய்மையும் ஓயாத் தொண்டும்
ஊழலற்ற ஆட்சிக்கு துணையாய் நின்று
எள்ளளவும் நேர்மைக்குப் பங்க மின்றி
எளிமையாய் என்றென்றும் வாழ்ந்து காட்டி
தள்ளாடா உறுதியோடு கொள்கை காக்கும்
தரமான நல்லவரைத் தேர்வு செய்வோம்.

பணத்துக்கு வாக்களிக்கும் பழக்கம் வேண்டாம்
பாசாங்காய் நடித்தேதான் வென்ற பின்னர்
பணத்துக்கு அலைவோரைப் படுக்க வைப்போம்
பாமரரும் நிமிர்ந்துவாழ தொண்டு செய்யும்
குணத்துக்கு உரியவரைத் தேடிக் காண்போம்
கொடுத்திட்ட உறுதிமொழி காத்து ,நன்றி
உணர்வுடைய பண்பினரை;ஐந்து ஆண்டும்
ஓடியாடி உழைப்பவரை ஆளச்செய்வோம்.

Saturday, November 27, 2010

ஓய்வு

துடிக்கின்ற நாடிக்குச் சாவில் ஓய்வு
          துள்ளுகின்ற இளமைக்கு முதுமை ஓய்வு
சுடுகின்ற கதிருக்கு இரவில் ஓய்வு
          சுடர்கின்ற நிலவுக்குப் பகலில் ஓய்வு
தொடுகின்ற செயலுக்கு வெற்றி ஓய்வு
          துன்பமுறும் மனதுக்கு இன்பம் ஓய்வு
கொடுக்கின்ற கரங்களுக்கு இன்மை ஓய்வு
           குதித்தாடும் உடலுக்கு உறக்கம் ஓய்வு


எழுந்துவரும் கடலலைக்குக் கரையில் ஓய்வு
           இருண்டுவரும் மேகத்திற்கு மழையில் ஓய்வு
எழுதுகின்ற தேர்வுக்குத் தேர்ச்சி ஓய்வு
           இருவர்தம் காதலுக்கு மணத்தால் ஓய்வு
பழுதுற்ற நெஞ்சுக்கு அமைதி ஓய்வு
           பசிக்கின்ற வயிற்றுக்கு உணவால் ஓய்வு
உழவனுக்கு அறுவடையின் மகிழ்ச்சி ஓய்வு
           உருவான கருவுக்குப் பேற்றில் ஓய்வு


திரைக்காட்சி காண்போருக்கு இடையில் ஓய்வு
           தெருப்பிச்சை எடுப்போர்க்கு ஏது ஓய்வு ?
அரசுவேலை ஓய்வதுதான் ஐம்பெத்தெட்டில்
            அறுபதில்தான் ஆசைக்கு ஓய்வு என்பர்
எரிகின்ற நெருப்புக்கு நீரால் ஓய்வு
             இளமையில் ஓய்வின்றி உழைத்தல்  நன்று
வரவுதனில் ஓய்வின்றி உழைத்துச்சேர்த்தால்
             வறுமைதான் ஓய்வுபெறும் சிறக்கும் வாழ்வு ! 

Saturday, November 20, 2010

வெண்ணிலவு

வெண்ணிலவே! தண்நிலவே! வானம் தன்னில்
விடியவிடிய உலாவந்து முகத்தைக் காட்டு;
கண்ணான எம்வீட்டு மழலைப்  பூக்கள்
களிப்புடனே சோறுண்ண முகத்தைக் காட்டு;
பெண்ணவளின் முகவனத்தில் மெருகை யூட்ட
பிரித்தளித்து உன்பொலிவில் மங்கி னாயோ?
விண்ணில்உன் பிறை,நிறையாம் சிரிப்பைக் கண்டு
பித்தனான கவிஞன்தன் கவிதைப் பூவே!